புரோ கபடி லீக் ஐந்தாவது சீஸன் ஹைதராபாத் நகரில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. முதன்முறையாக தமிழ்நாட்டிலிருந்து ஓர் அணி புரோ கபடி தொடரில் பங்கேற்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்டர் பிரபஞ்சன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிஃபண்டர் அருண் உள்பட ஏழு தமிழ்நாட்டு வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். சச்சின் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் தூதராக உள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஜெர்ஸி அறிமுக விழாவில் பேசிய கமல், ‛இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாகத் திகழும் சச்சின் டெண்டுல்கர், கபடியைப் பிரபலப்படுத்த முன்வந்தது மகிழ்ச்சி. எங்கோ ஓர் ஐரோப்பியத் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உலகெங்கும் பரவ முடியும் என்றால், நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் ஆடி வந்த விளையாட்டு, தேசிய எல்லைகளை மட்டுமல்ல, உலக எல்லைகளைக் கடந்து செல்லும் என நம்புகிறேன். அதனால், அணியின் உரிமையாளர் என்னை அணுகியபோது உடனே சம்மதித்துவிட்டேன். இதை ஒரு பெருமையாகவும் கடமையாகவும் கருதுகிறேன். ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி பெற வேண்டும்’’ என்று அவர், வாழ்த்து தெரிவித்தார்.
அதிகம் பேரால் பார்க்கப்படும் இந்திய விளையாட்டு லீக் தொடர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் புரோ கபடி லீக் தொடரின், ஐந்தாவது சீஸன் நாளை கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் என்.பிரஸாத், அல்லு அரவிந்த், கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், பாட்மின்டன் வீரர்கள் சாய் ப்ரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், குரு சாய்தத், பயிற்சியாளர் கோபிசந்த், ராமுராவ் மற்றும் சாமுண்டீஸ்வரி போன்ற பிரபலங்கள் பங்கேற்கின்றனர். தொடக்கவிழாவில் Nritarutya நடன நிகழ்ச்சி நடைபெறும்
Source : Vikadan
No comments:
Post a Comment