ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுதான் மொழியைத் தாண்டி அனைவராலும் பார்த்து ரசிக்கக்கூடியது. மொழி இதற்கு அவசியமில்லை என்றாலும்கூட, கிரிக்கெட் கமென்ட்ரியைத் தமிழில் கேட்டு ரசித்த பொழுதுகள் மிகவும் அலாதியானவை. சென்னை வானொலி நிலையத்துக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் கமென்ட்ரியைத் தமிழில் தந்தது சோனி இ.எஸ்.பி.என்-தான். அது தவிர `விஜய் சூப்பர்' சேனலிலும், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் கமென்ட்ரி வழங்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது அது விஜய் டிவி-யின் பழைய நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் சேனலாக முற்றிலும் மாறிவிட்டது. இதனால் கவலைகொண்ட ரசிகர்களுக்காகவே, தற்போது 24 மணி நேரமும் தமிழ் கமென்ட்ரி, தமிழுக்கான எக்ஸ்க்ளூசிவ் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள், குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பர்ய விளையாட்டுகளை மையமாகவைத்து தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் என அசத்தலான பல ஐடியாக்களுடன் கடந்த மே 28-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது `ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்'. இதுதான் இந்தியாவின் முதல் தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனல்.
இந்த சேனலில் தற்போது `இது எங்க ஆட்டம்' என்ற நிகழ்ச்சி, மதியம் 1.40 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் விளையாட்டு வீரர்கள், தங்களது மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துவருகின்றனர். மேலும், மேட்ச் ஹை-லைட்ஸ், விளையாட்டு வீரர்களைப் பற்றிய தொகுப்பு, முன்னாள் வீரர்களின் அனுபவங்கள் எனப் பல ஆவணப்படங்களும் தொகுக்கப்பட உள்ளன. காலை 11.40 மணிக்கு ஒளிபரப்பாகும், `மச்சி... ஆர் யூ ரெடி?' என்ற நிகழ்ச்சியை ஆர் ஜே பாலாஜி தொகுத்து வழங்குகிறார். இதில் 2017-ம் ஆண்டு நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் முழு தொகுப்பும் ஆவணங்களுடன் காண்பிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிவேகத்தில் பந்தைக் கையாளும் விக்கெட் கீப்பர், பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிடும் தலைசிறந்த பேட்ஸ்மேன், குறிப்பாக இவர் இல்லை என்றால் `சென்னை சூப்பர் கிங்ஸ்' ஆட்டம் கண்டுவிடும் என்ற அளவுக்கு விளையாடிய மகேந்திர சிங் தோனியின் பெருமைகளையும் சாதனைகளையும் கூறிக்கொண்டே போகலாம். இந்த சேனலில் `நம்ம தல தோனி 2017' என்ற நிகழ்ச்சி வாரத்துக்கு மூன்று நாள்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதில் தோனி, அவரது அனுபவங்களையும், 2017-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் திட்டங்களைப் பற்றியும் பகிர்ந்துவருகிறார். 20 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கான தனிப்பட்ட நேரம், இதுவரை ஒதுக்கப்படவில்லை. தோனியின் இந்த எஸ்க்ளூசிவ் ஷோ, நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் ஃபில்லர்ஸாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. மேலும், மேட்ச் இறுதியில் வீரர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதைத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சப்-டைட்டிலாகவும் போடப்பட்டு வருவது ரசிகர்களுக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
``இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி இருப்பினும், தமிழில் ஸ்போர்ட்ஸ் சேனல் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் பின்னணி என்ன?'' என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மற்றும் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களிடம் கேட்டபோது...
``விளையாட்டுக்கு, அதுவும் கிரிக்கெட்டுக்கு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். 1900-ங்களிலிருந்தே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கோ-கோ, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. மேலும், கிரிக்கெட் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழ் ரசிகர்களின் இந்த வரவேற்புதான் சேனல் ஆரம்பிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். இந்த சேனலில் தமிழ்நாட்டின் பாரம்பர்ய விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி நிறைய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் சேனலின் முழுநேர நிகழ்ச்சிநிரல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் பதிலளித்தார்.
மேலும், இந்த மாதம் ஜூலை 22-ம் தேதி, `தமிழ்நாடு ப்ரீமியர் லீக் மேட்ச்' மற்றும் ஜூலை 28-ம் தேதி, `விவோ ப்ரோ கபடி லீக்' போன்ற இரண்டு போட்டிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு ப்ரீமியர் லீக் விளையாட்டு வீரர்கள் மற்றும் சென்னையின் FC அணி வீரர்கள் நிகழ்ச்சியைத் தொகுப்பதில் முக்கியப் பங்காற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், எஸ்.பத்ரிநாத், எஸ்.ஸ்ரீராம், எஸ்.ரமேஷ் மற்றும் ஹேமங் பதானி போன்ற முன்னாள் விளையாட்டு வீரர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதலிலும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு கமென்ட்ரி கொடுப்பதிலும் பங்கேற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
எனவே, வரும் ஆண்டில், `விளையாட்டுக்கான கூடுதல் முக்கியத்துவம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலால் கொடுக்கப்படுமா?' என்ற ஆவல் அனைத்து விளையாட்டு ரசிகர்களிடமும் காணப்படுகிறது. தமிழ்ப் பாரம்பர்ய நிகழ்ச்சிகளுக்கான முக்கியத்துவம் எந்த அளவுக்குக் கொடுக்கப்படும் என்பதற்கான விடையை, பொறுத்திருந்து காணலாம்.
இதுபோன்ற முயற்சிகள் தமிழில் தொடர வாழ்த்துகள்.
No comments:
Post a Comment