மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் "டிடி இந்தியா' விரைவில் சர்வதேச ஆங்கில செய்திச் சேனலாகிறது. இதேபோல், "டிடி நியூஸ்' சேனல், ஹிந்தி செய்திச் சேனலாகிறது.
இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நிதி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சர்வதேச அளவில் முன்னணி சேனலாக வர முடியாமல் "டிடி இந்தியா' சேனல் போராடி வருகிறது. "டிடி நியூஸ்' சேனலில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மாறி மாறி செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால், அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இவ்விரு சேனல்களின் வடிவத்தை மாற்றுவது தொடர்பான யோசனையை பிரசார் பாரதியின் ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் சூரியபிரகாஷ் முன்மொழிந்தார்.
அதையடுத்து, பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு "டிடி இந்தியா' சேனலை சர்வதேச ஆங்கில செய்திச் சேனலாக மாற்றவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, "டிடி இந்தியா' சேனலில் உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளும், நிகழ்கால நடப்புகளும் ஒளிபரப்பப்படும். "டிடி நியூஸ்' சேனலில் ஹிந்தி செய்திகள் மட்டும் ஒளிபரப்பப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment