சென்னை: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இன்று ஒரு இன்ப செய்தியை வெளியிட்டுள்ளது. கட்டண சேனல்களின் அதிகபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ .19 இனி ரூ .12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இனிமேல், ரூ .12 அல்லது அதற்கும் குறைவான தொகைதான், கட்டண சேனல்களுக்கு வசூலிக்க வேண்டும். "முன்னதாக ரூ .19 உச்சவரம்பாக இருந்தது, ஆனால் இப்போது ரூ .12 க்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும்" என்று டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா இன்று கூறினார்.
"ரூ .130 க்கு 100 சேனல்கள் வழங்கப்பட்டன, அதில் பிரசார் பாரதி ஒளிபரப்பிய கட்டாய சேனல்களும் அடங்கும். இப்போது பிரசார் பாரதி சேனல்களைத் தவிர ரூ. 130 கட்டணத்தில், 200 சேனல்கள் ஒளிபரப்பாக வேண்டும் என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது" என்று டிராய் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு இப்போது சன் டிவிக்கு 19 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஸ்டார் ஸ்போர்ட்சுக்கும் அவ்வாறே. இனி அவர்கள் ரூ.12 வரைதான், நிர்ணயிக்க முடியும். இதன் மூலம், ஒட்டுமொத்தமாக, டிடிஎச் கட்டணம் குறையும் வாய்ப்புள்ளது.
அதேநேரம், சில குழுமங்கள், தங்களிடமுள்ள பிற சேனல்களின் கட்டணங்களை இப்போதுள்ளதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த இழப்பை அவர்கள், அதில் ஈடுகட்ட முயலக்கூடும். உதாரணத்திற்கு இப்போது ரூ.6 என்ற விலையில் வழங்கப்படும் தங்கள் சேனலின் கட்டணத்தை அவர்கள் ரூ.10 ஆக அதிகரிக்க கூடும்.
முன்பு ஒட்டுமொத்தமாக டிடிஎச்சுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், பல மாதங்கள் முன்பு, டிராய் தனது உத்தரவில், ஒவ்வொரு சேனலும் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதன்பிறகு கட்டணங்கள் அதிகரித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment