தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில், எஸ்.பேண்ட் ஆன்டனாவுடன் கொண்ட ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. முன்னதாகச் செலுத்தப்பட்ட `ஜி சாட்-6’ என்ற செயற்கைக்கோளின் மேம்பட்டதாக வெர்ஷன்தான் இந்த `ஜி சாட்-6 ஏ’. 2,140 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எஃப்-8 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. எஃப்-8 ராக்கெட் 415.6 டன் எடை கொண்ட அளவில் உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தபட்டவுடன், தனது தகவல் தொலைத்தொடர்பு கண்காணிப்புப்பணிகளைத் தொடங்கிவிடும். இது, இஸ்ரோ அனுப்பும் 12-வது ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் ஆகும். இதில்,செயற்கைக்கோள் 7 முறை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, 4 முறை இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்டவுன் நேற்று தொடங்கியது. இதனையடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 4.56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எஃப்-8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் விண்ணில் பாய்ந்த 18 வது நிமிடத்தில், சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதில் பல்வேறு சாதனை படைத்து வரும் இஸ்ரோ இதன் மூலம் தற்போது மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பதவியேற்றபிறகு ஏவப்படும் முதல் செயற்கைகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks : vigadan
No comments:
Post a Comment