ஐஆர்என்எஸ்எஸ் - 1எச் என்ற செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைக்கோளின் வெப்பத் தகடுகள் பிரியாததால் தோல்வி ஏற்பட்டதாக இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் தெரிவித்திருக்கிறார்.
துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனத்தின் ( பிஎஸ்எல்வி - சி 39)மூலம் இன்று மாலை 7 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
ஜிபிஎஸ், க்ளோஸ்நாஸ் போல வழிகாட்டுதல்களுக்கும் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும் உதவக்கூடிய வகையில் NavIC என்ற அமைப்பை உருவாக்க இந்தியா ஐஆர்என்எஸ்எஸ் என்ற செயற்கைக்கோள்களை ஏவிவருகிறது. அந்த வரிசையில் இது எட்டாவது செயற்கைக்கோளாகும். இதன் மூலம் இந்திய எல்லையிலிருந்து 1500 கி.மீ. பரப்பை இந்தியாவால் கண்காணிக்க முடியும்.
29 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது இந்திய நேரப்படி நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இதற்கான கவுன்ட் டவுண் துவங்கிய நிலையில் இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
ஏவும் முயற்சி வெற்றியடைந்தாலும் செயற்கைக் கோளை நிலைநிறுத்துவதில் தோல்வி ஏற்பட்டிருப்பதாக இஸ்ரோவின் தலைவர் எ.எஸ். கிரண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ராக்கெட்டை ஏவும் எந்தப் பகுதியிலும் பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், செயற்கைக் கோளின் வெப்பக் கவசம் அதிலிருந்து பிரியவில்லை. அது நிகழ்ந்தால்தான் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிறுத்த முடியும். செயற்கைக்கோள் வெப்பக் கவசத்திற்குள் இருக்கிறது. அதைப் பயன்படுத்த முடியாது" எனக் கூறினார் கிரண் குமார்.
இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்படும் என்றும் கிரண்குமார் தெரிவித்தார்.
NavIC அமைப்புக்கான முதல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஏ நான்காண்டுகளுக்கு முன்பாக ஏவப்பட்டது. 2016ஆம் ஆண்டின் மத்தியில் இதிலிருந்த அணு கடிகாரம் செயலிழந்தது. ஆகவே அந்த செயற்கைக்கோளை ஈடுசெய்யவே ஐஆர்என்எஸ்எஸ் - 1 எச் ஏவப்பட்டது.
2013க்கும் 2016க்கும் இடையில் இஸ்ரோ ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரோவின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
No comments:
Post a Comment