இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் கொண்டு வந்த புதிய டிடிஎச் விதிகளை பின்பற்றாமல் இருந்த டாட்டா ஸ்கை நிறுவனம், டிராய் அனுப்பிய நோட்டீசை தொடர்ந்து விதிகளை பின்பற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களின் மீது புதிய விதிகளை கொண்டுவந்தது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேவையில்லாமல் அவர்கள் மீது சேனல்களை திணிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதிகளை உருவாக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. சில டிடிஎச் நிறுவனங்களுக்கும் கேபிள் ஆபரேட்டர்களும் இந்த புதிய விதிகளை எதிர்த்து வந்தனர். டாட்டா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்கள் டிராய்க்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களுக்கு வேண்டிய சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க டாட்டா ஸ்கை நிறுவனம் போதிய வசதிகள் செய்து கொடுக்காததால், அந்நிறுவனத்துக்கு டிராய் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, புதிய விதிகளை பின்பற்ற தயாராக இருப்பதாக டாட்டா ஸ்கை தெரிவித்துள்ளது. "புதிய விதிகளின் மேல் கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை பின்பற்ற மாட்டோம் என்று தாங்கள் எப்போதும் கூறவில்லை" என டாடா ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின் படி சேனல்களை தேர்ந்தெடுக்க தங்கள் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.